தேனி மாவட்டத்தில் கோயில் பூசாரி இறந்த விவகாரத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் தம்பி ஓ.ராஜா உள்பட 6 பேர் மீதான வழக்கில் இன்று திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து (22). இவர் கைலாசப்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலின் பூசாரியாக இருந்து வந்தார்.
கோயிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக இவருக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ. ராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி நாகமுத்து தற்கொலை செய்துக் கொண்டார். இவர் தற்கொலை செய்துக் கொள்ள கோயில் அறங்காவலரும் பெரியகுளம் முன்னாள் நகர்மன்றத் தலைவராகவும் இருந்த ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உள்பட 7 பேர் மீது பெரியகுளம் தென்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவின்படி 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்ற போதே பாண்டி இறந்துவிட்டார். இந்த நிலையில் மற்ற 6 பேர் மீதான விசாரணை திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஓ.ராஜா, மணிமாறன், சிவக்குமார், ஞானம், லோகு, சரவணன் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். எனினும் இந்த வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த மரண வழக்கில் 23 சாட்சியங்கள் இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட 6 பேருக்கு எதிரான ஆதாரங்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
அரசுத் தரப்பின் இறுதிக் கட்ட வாதத்துக்காக ஒத்தி வைக்கப்பட்டு இருந்த இந்த வழக்கு விசாரணையின் போது மூன்று பேர் மட்டும் நீதிபதி முரளிதரன் மூவர் ஆஜராகினர். அப்போது ஓ. ராஜா உள்பட மற்ற 3 பேர் ஆஜராகாத நிலையில் இறுதிக் கட்ட விசாரணை முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது. இந்த வழக்கில் கிடைக்கும் தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு மேலும் பிரச்சினையாக மாறியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.