எடப்பாடி பழனிசாமி, தற்போது கட்சி ஆரம்பித்துள்ள விஜய்யின் கை, காலைப் பிடித்து தனது பதினோராவது தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என கனா காண்கிறார் என ஓபிஎஸ் ஆதரவாளரும், பத்திரிக்கையாளருமான மருது அழகுராஜ் குத்திக் காட்டியுள்ளார்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என முழங்கி வரும் அவர், ‘‘விஜய்யோ, எடப்பாடியின் எடுபடாத தோல்வித் தலைமையை தனது வெற்றிக் கழகத்திற்கு உரமாக்கிக் கொள்ள திட்டமிடுகிறார். கனவுகளை திட்டமிடுதல் வென்றுவிடும் என்பதை எடப்பாடிக்கு காலம் உணர்த்தக் காத்திருக்கிறது.
விஜய்யை கூட்டணித் தலைவராக கொண்டு அவரை துணை முதலமைச்சராக ஏற்பதற்கு பதிலாக விஜய்யையே தலைமையாக ஏற்று அவரையே முதலமைச்சராக்கலாம் என்கிற முடிவை அதிமுக தொண்டர்கள் எடுத்துவிட்டால் என்னாவது? ஆக மொத்தத்தில் விஜய்யை திமுக எதிர்த்து
வளர்க்கும். எடப்பாடி திமுக ஏமாந்து வளர்க்கும். இளைஞர்களை பெருவாரியாக கொண்ட கட்சியாக திமுக, பா.ஜ.க, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை உருவாகி விட்டன.
அதிலும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை போன்ற திட்டங்களால் பெண்களின் ஆதரவை பெருமளவில் ஆளும் திமுக வசப்படுத்தி வரும் நிலையில், படித்தவர்கள் மத்தியில் பா.ஜ.க வுக்கும் அதன் தமிழ்மாநில தலைவர் அண்ணாமலைக்கும் கூடுதல் ஆதரவு என்றிருக்க, மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள், முதன்முறையாக வாக்களிக்க காத்திருக்கும் இளம் தலைமுறை வாக்காளர்கள் நடிகர் விஜய்யை ஆதரிக்கவே பெரும் வாய்ப்பு இருக்கிறது.
அதிமுகவை பொருத்த வரை இளைஞர்களை ஈர்க்கும் வழியற்று அம்மாவுக்கு பிறகு பெண்களின் ஆதரவையும் பெருமளவில் இழந்து அது முதியோரது முகாமாகவே காட்சியளிக்கிறது. என்ன செய்வது மாளிகையே ஆனாலும் பராமரிப்பு இல்லாவிட்டால் அது பாழடைந்த பங்களா தானே..?
பிளவுகள் ஒன்றாகி ஒற்றுமை கை கூடாது போனால் மற்றொரு மதிமுக- வாக அதிமுக மாறும். (எடப்பாடிதிமுக) எதிமுக-வுடன் கூட்டணி வைத்தாலும், வைக்காமல் போனாலும் அதிமுகவின் பெரும்பகுதி விஜய்யின் தவெக வசமாகும். பாஜக தலைமையிலான NDA கூட்டணி இரண்டாம்
இடத்தை எட்டிப்பிடிக்க வாய்புகள் கூடும்.
எதிர்வாக்குகள் சிதறுவதால் தற்போதைய கூட்டணியை தக்கவைத்து திமுகவே 2026-லும் தொடர்ந்து தமிழகத்தை ஆளும்… விஜய்யை விமர்சிக்க வேண்டாம் என்கிற திமுக வின் நிலைப்பாடு.. அதே விஜய்யை விமர்சிக்க கூடாது என்கிற எடப்பாடியின் உத்தரவு…
விஜய்யை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் சீமானின் பதற்றம்… விஜய்யை முன்வைத்து திருமாவுக்கு
ஏற்பட்டுள்ள குழப்பம்… தங்கள் சித்தாந்தத்தோடு மோதும் விஜய்யை எதிர்கொள்ள தீவிர
திட்டமிடுதலில் பாஜக… இப்படி ஒட்டுமொத்த கட்சிகளையும் ஒரு மாநாட்டை வைத்தே
உதறலெடுக்க வைத்திருக்கிறார் விஜய் என்றால் கில்லி எதிர்கால தமிழக அரசியலில் தவிர்க்க
முடியாத புள்ளி தான்’’ என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.