நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்று முடிந்தது. மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்ததோடு அரசியலில் தங்களது எதிரிகள் யார் என்பதை தெளிவுப்படுத்தினார்.
இது குறித்த விஜய் ஆற்றிய உரையில், “நாட்டை பாழ்ப்படுத்துகிற, பிளவுவாத அரசியல் செய்கிறவர்கள் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமுதற் ஒரே கொள்கை எதிரி, அடுத்து திராவிட மாடல் என்று சொல்லி கொண்டும், பெரியர், அண்ணா பெயரை சொல்லி கொண்டும் தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கிற ஒரு குடும்பம் நமது எதிரி” என்று பேசி தி.மு.க. கட்சியை சாடியிருந்தார். இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மாநாட்டில் விஜய் பேசியதை நான் பார்க்கவில்லை. பார்த்த பிறகு கருத்து தெரிவிக்கிறேன். முழு பேச்சை பார்த்த பிறகு தான் பேச முடியும்” என்று கூறியுள்ளார்.
மாநாட்டிற்கு முன்பு விஜய் கட்சி குறித்து பேசிய துணை முதல்வர் உதயநிதி “விஜய் அவர்கள் எனக்கு நீண்டகால நண்பர். என்னுடைய முதல் திரைப்படத்தை அவரை வைத்துத்தான் தயாரித்தேன். அவருடைய புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.
இங்கு யார் வேண்டுமானாலும் கட்சித் தொடங்கலாம். எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. 75 ஆண்டுக்காலமாக எந்தக் கட்சியும் தொடங்கப்படவில்லை என்று நீங்கள் சொல்லிவிட முடியாது. பல கட்சிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. பல கட்சிகள் காணாமல் போயிருக்கிறது. மக்கள் பணியில் எப்படி ஈடுபடுகிறோம் என்பதுதான் முக்கியம்” என்று தெரிவித்து இருந்தார்.