Homeசெய்திகள்வானிலைவேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்... அதிகாரிகள் கண்காணிப்பு!

வேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்… அதிகாரிகள் கண்காணிப்பு!

-

- Advertisement -

தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை முதல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வந்த நிலையில் காலை முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை தியாகராயநகர், வடபழனி, வளசரவாக்கம், அசோக் நகர், போரூர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமின்றி சென்னையின் புறநகர்  பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி என சென்னை- திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளிலும் பலத்தமழை பெய்து வருகிறது.

3 டி .எம்.சி.யை எட்டியது செம்பரம்பாக்கம்

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. செம்பரம்பாக்கம் பகுதியில் மட்டும் 46.80 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என கூறப்படுகிறது. இன்று காலை 713 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 3977 கன அடியாக அதிகரித்துள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியாக இருந்த நீர்வரத்து 2986 மில்லியன் கன அடி எட்டியுள்ளது. அதேபோல் ஏரியின் நீர்மட்டம் 24 அடியில் 21.50 அடியை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதே போல  டெல்டா மாவட்டங்களான அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 35 மாவட்டங்களில் இன்று  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், நாமக்கல், சேலம்,தர்மபுரி, திருப்பத்தூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் இடங்களில் மசூதி: சட்டம் இந்துக்களின் உரிமைகளை மீறுகிறதா..?

MUST READ