லெபானானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரிட்டு வரும் இஸ்ரேல், அவர்களது ஆளுகைக்கு உட்பட்ட காசா நகரை முற்றுகையிட்டு தரைவழி, வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த போரியில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் தங்களது வீடுகளை இழந்து முகாம்களில் வசித்து வருகின்றனர். இதனிடையே, இந்த போரில் ஹமாசுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வந்தனர்.
இதற்கு பதிலடியாக பேஜர், வாக்கி டாக்கி கருவிகளை வெடிக்க செய்து இஸ்ரேல் தாக்கியது. இதன் தொடர்ச்சியாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகளை குறிவைத்து கடந்த 4 நாட்களாக தொடர் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் ஒரே வாரத்தில் லெபனானில் 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் உள்ள
தாஹியே பகுதியில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா தலைமை அலுவலகம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. நேற்று இரவு முதல் நஸ்ரல்லா மாயமான நிலையில் ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து இதுவரை குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.