Homeசெய்திகள்உலகம்இலங்கை அதிபர் தேர்தல்... 2ம் கட்ட வாக்கு எண்ணிக்கையில் அநுர குமார திசநாயகே முன்னிலை 

இலங்கை அதிபர் தேர்தல்… 2ம் கட்ட வாக்கு எண்ணிக்கையில் அநுர குமார திசநாயகே முன்னிலை 

-

- Advertisement -

இலங்கை அதிபர் பதவிக்கான வாக்குஎண்ணிக்கையின் முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளை பெறாததால் 2ம் கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசநாயகே முன்னிலை வகித்து வருகிறார்.

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித்தலைவர்
சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயகே, நமல்
ராஜபக்சே உள்ளிட்ட 38 பேர் போட்டியிட்டனர். நேற்று விறுவிறுப்புடன் நடைபெற்ற வாக்குப்பதிவில்  75 சதவீத வாக்குகள் பதிவானது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும்,  சில மணி நேரங்களுக்குள் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

விடிய, விடிய நடைபெற்ற வாக்கு எண்ணும் பணியில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசநாயகே முன்னிலை வகித்தார். மொத்தமுள்ள 22 மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் அநுர குமார திசநாயகே முன்னிலை வகித்தார். தமிழர் பகுதிகளில் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாச ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை 7 மணி நிலவரப்படி எண்ணி முடிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் அநுர குமார திசாநாயகே 50 சதவீதத்துக்கு மேலாக வாக்குகள் பெற்றதாக தகவல் வெளியானது. பின்னர் அவரது வாக்கு சதவீதம் திடீரென குறைந்து, சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் அதிகரித்தது.

முதல் சுற்றில் அநுர குமார திசாநாயகே 42.31 சதவீத வாக்குகளும், சஜித் பிரேமதாசா 32.76 சதவீத வாக்குகளும் பெற்றனர். தேர்தலில் 50 சதவீத வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். ஆனால் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறவில்லை என்றால் அடுத்த சுற்றுவாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஏற்கனவே நடந்த வாக்கு எண்ணிக்கையில், முதல் 2 இடங்களை பிடித்த வேட்பாளர்கள் மட்டுமே, அடுத்த சுற்றுக்கு செல்வார்கள்.

அதன்படி, 2வது சுற்றுக்கு அநுர குமார திசாநாயகே மற்றும் சஜித் பிரேமதாசா ஆகியோர் தகுதி பெற்றனர். இந்த சுற்றில், வாக்குச்சீட்டுகளில் 2 மற்றும் 3 -ம் எண்ணாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னுரிமை வாக்குகள் எண்ணப்படும். இதில் 2
வேட்பாளர்களுக்கும் கிடைத்த வாக்குகள், மொத்த வாக்குகளுடன் சேர்த்து
கணக்கிடப்படும். அதன்படி தற்போது 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் அநுர குமார திசாநாயகே 13 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிபர் தேர்தலில் அவர் வெல்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

MUST READ