உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உஸ்பெகிஸ்தானில் இந்திய இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய நிறுவனம் தயாரித்த Dok-1 Max இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் இருக்கும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்ததால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட இருமல் மருந்தில் எத்திலீன் கிளைகோல் இருந்ததாக தெரிகிறது, இந்த பொருள் நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் 95% செறிவூட்டப்பட்ட கரைசலில் சுமார் 1-2 மில்லி/கிலோ குழந்தையின் உடலில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தும். அதாவது வாந்தி, மயக்கம், வலிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.உஸ்பெகிஸ்தானில் இருந்து வந்த அறிக்கை குறித்து தங்களுக்குத் தெரியும் என்று இந்தியாவின் சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர் ஆனால் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதனிடையே Dok-1 Max என்ற மருந்தின் மாத்திரைகள் மற்றும் சிரப்கள் நாட்டின் அனைத்து மருந்தகங்களிலும் பரிந்துரைக்கப்பட்ட முறையில் விற்பனையிலிருந்து திரும்பப் பெறப்படுவதாக உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.