Homeசெய்திகள்உலகம்முடிவுக்கு வந்த போர் நிறுத்தம் : 2 நாட்களில் 240 பேர் கொன்று குவிப்பு..

முடிவுக்கு வந்த போர் நிறுத்தம் : 2 நாட்களில் 240 பேர் கொன்று குவிப்பு..

-

இஸ்ரேல் - ஹமாஸ் போர்
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், 2 நாட்களில் காசாவில் 240 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பிற்கும் இடையே கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி போர் தொடங்கியது. இருதரப்பும் சரமாரியாக நடத்திய வான்வழித் தாக்குதலில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் இஸ்ரேல் நாட்டு மக்கள் 240 பேரை ஹமாஸ் அமைப்பு பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தது. பிணைக்கைதிகளை விடுவிக்கவும், அமெரிக்கா , எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதாலும் பரஸ்பர போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்படி 100 இஸ்ரேலிய பிணைக்கைதிகளை ஹமாஸும், பதிலுக்கு 240 பாலஸ்தீனர்களை இஸ்ரேலும் விடுவித்தது. முதலில் 4 நாட்களுக்கு போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு வாரமாக நீட்டிக்கப்பட்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை காலை 7 மணியுடன் முடிவுக்கு வந்ததை அடுத்து, காசா முனையில் இஸ்ரேல் மீண்டும் அதிரடி தாக்குதலை தொடங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசா முனையில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் நிலைகளை குறிவைத்து வான்வழி தாகுதலையும், தரைவழி தாக்குதலையும் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்

அதேபோல், இஸ்ரேல் மீதும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதலை நடத்துகின்றனர். அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தவிர்க்குமாரு அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், அதனை பொருட்படுத்தாமல் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. தாக்குதல் தொடங்கப்பட்ட முதல் நாளில் 193 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பின் 400 இருப்பிடங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 240 பேர் பலியாகி உள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்ததாகவும் , போர் தொடங்கியதில் இருந்து இதுவரை காசாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ