Homeசெய்திகள்உலகம்8 லட்சம் பேர் பட்டினி... 24,000 பேர் பலி...

8 லட்சம் பேர் பட்டினி… 24,000 பேர் பலி…

-

துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க சுமார் 8 லட்சம் பேர் உணவின்றி தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பிப்ரவரி மாதம் 6ம் தேதி அதிகாலையில் தெற்கு துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலையில் உறக்கத்தில் இருந்த மக்கள் திடீரென கட்டிடங்கள் குலுங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக முடிந்தவரை அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். அதே சமயம் சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் நில அதிர்வை உணரவில்லை.

அடுத்த சில நிமிடங்களில் துருக்கியும் சிரியாவும் நில நடுக்கத்தால் ஆட்டம் கண்டது. கட்டிடங்கள் குலுங்கியது. ரிக்டர் அளவில் அதிகபட்சமாக 7.8 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் தீப்பெட்டிகள் போல் சரிந்து விழத் தொடங்கின.

முன்னதாக சாலையில் தஞ்சம் அடைந்தவர்கள் தப்பித்துக் கொண்டனர். ஆனால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒவ்வொருவராக உயிரிழக்கத் தொடங்கினர். இடிபாடுகளில் சிக்கியவர்கள் தாங்கள் நம்பும் கடவுளை பிரார்த்தினர்.

அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் அதிர்ச்சியடைந்த இரு நாட்டு அரசாங்கங்களும் மீட்புப் பணியை துரிதப்படுத்தின. ராணுவத்தினரும், மீட்புப் படையினரும் குவிக்கப்பட்டு கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை முடிந்தவரை காப்பாற்றத் தொடங்கினர்.

இப்போது ஏற்பட்ட நிலநடுக்கம் 1822 ஆம் ஆண்டு அலெப்போ பூகம்பத்திற்குப் பிறகு சிரியாவை பாதித்த மிக மோசமானது என்று வானிலை வல்லுநர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேலும் துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தின் பாதிப்பு அருகில் இருக்கும் இஸ்ரேல், லெபனான், சைப்ரஸ் மற்றும் துருக்கியின் கருங்கடல் கடற்கரை வரை உணரப்பட்டது.

சனிக்கிழமை நிலவரப்படி துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்சி 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிரியாவில் மட்டும் 5.30 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

சுமார் 8 லட்சம் பேர் உணவுக்காக தவித்து வருகின்றனர். போர் என்று வரும்போது பகைமை உணர்வு இருந்தாலும் தற்போது ஏற்பட்டுள்ள அசாம்பாவிதத்தை அண்டை நாடுகள் கண்டுகொள்ளாமல் இல்லை.

இந்தியா உள்பட ஏராளமான நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு நேசக்கரங்களை நீட்டி உதவி செய்து வருகின்றன. ஒவ்வொரு நாடும் அந்நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக மருந்து, நிவாரணம் மற்றும் உணவுப் பொருட்களை அனுப்பி வருகின்றன.

நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவாரம் ஆன நிலையில் இடிபாடுகளில் இருந்து குழந்தைகளும், சிறுவர்களும் உயிரோடு  மீட்கப்படுவது அவர்கள் வாழ்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

எனினும் பெற்றோரை இழந்து தவிக்கும் அந்த பிஞ்சுகளின் எதிர்காலம் எப்படி செல்லும் என்ற கேள்வி எங்களுக்கும் எழாமல் இல்லை.

MUST READ