பாகிஸ்தானில் ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் சர்ஹாரி ரயில் நிலையம் அருகே திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் 80க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினரும், காவல்துறையினரும் விரைந்துள்ளனர். விபத்து ஏற்பட்ட தடத்தில் ரயில் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டு, மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் தடம்புரண்ட ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை உறுதியாக தெரியவரவில்லை என பாகிஸ்தான் ரயில்வேயின் சுக்கூர் பிரிவு வர்த்தக அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் தடம்புரண்ட பெட்டிகளில் ஏராளமானோர் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரயில் பெட்டிகள் தடம் புரண்டதன் காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிந்த் மாகாணத்தின் பல்வேறு மருத்துவமனைகளிலும், விபத்துக்குள்ளானோரை அனுமதிக்கும் வகையிலான மருத்துவ அவசர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதோடு, இரத்தம் கொடையாளர்களின் தேவைக்குமான உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.