ரஷ்யாவில் ஆயுதக் குழு கிளர்ச்சி- கண்டதும் சுட அதிபர் புதின் உத்தரவு
ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த வாக்னர் ஆயுதக் குழு திடீரென அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தொடங்கியுள்ளது.
வாக்னர் படை வீரர்கள் ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு மோதலை தூண்டும் வகையில் வாக்னர் படை செயல்பட்டதாக ரஷ்யா குற்றம்சாட்டியதை தொடர்ந்து வாக்னர் படை திடீர் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆயுதக்குழு ரஷ்ய நாட்டின் தெற்கு பகுதியில் ராணுவ அலுவலகத்தை கைப்பற்றியுள்ளது. ஆயுதக்குழுவின் கிளர்ச்சியை அடுத்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பொது நிகழ்ச்சிகள் அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளன.
வாக்னர் ஆயுதக்குழு கிளர்ச்சி குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய ரஷ்ய அதிபர் புதின், “ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள், கிளர்ச்சியில் ஈடுபடுவோர் தேச துரோகிகள். தேச துரோகத்தில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர். ஆயுத கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு தேவையான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள வாக்னர் ஆயுதக் குழுவினரை ராணுவத்தினர் கண்டதும் சுட்டுதள்ள வேண்டும்.ஆயுதக் குழுவினரின் கிளர்ச்சி தீவிரவாதத் தாக்குதல்” என்றார்.