காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், பிணைக்கைதிகளாக உள்ள இஸ்ரேல் நாட்டு மக்களை கொலை செய்வோம் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் பல ஆண்டுகளாக இருந்து வரும் எல்லை பிரச்சனை காரணமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது போர் மூள்வதும் உண்டு. இருப்பினும் பல ஆண்டுகளாக பெரிய அளவிலான போர் எதுவும் இல்லாமல், அமைதியான முறையிலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீன பகுதிகளை விடுவிக்க வலியுறுத்தி, அந்நாட்டின் காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் என்னும் இஸ்லாமிய அமைப்பு கடந்த 7ம் தேதி காலை அதிரடியாக தாக்குதலை தொடங்கியது.
சுமார் 20 நிமிடங்களில் 5000 ராக்கெட்டுகளை திடீரென ஏவியது. எதிர்பாராத நேரத்தில் அடுத்தடுத்து குண்டு மழை பொழிந்ததால், இஸ்ரேல் ஸ்தம்பித்தது. என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் தரைவழி, கடல்வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் கண்ணில் படுபவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளினர். அத்துடன் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோரை பிணைக்கைதிகளாக பிடித்து காசாவுக்கு கொண்டு சென்றனர். அவர்களை கொடூரமாக கொலை செய்வதையும், பெண்களின் நிர்வாண உடல்களை காரில் எடுத்துச்செல்லும் வீடியோக்களையும் ஹமாஸ் வெளியிட்டு வருகிறது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலும், காசா நகரில் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பிலும் வானுயரக் கட்டிடங்கள் தரைமட்டமாகி வருகின்றன. ராணுவ வீரர்கள், ஹமாஸ் பயங்கரவாதிகள், அப்பாவி பொதுமக்கள் என இருதரப்பிலும் சேர்த்து 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே தொடர் தாக்குதல் மூலம் ஹமாஸ் பயங்கரவாதிகளின் காசாவுடனான எல்லைப்பகுதிகளை இஸ்ரேல் முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
மேலும், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பாக எகிப்துக்கு தப்பிச்செல்லுமாறும் இஸ்ரேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் பிணைக்கைதிகளாக உள்ள மக்களை கொலை செய்வோம் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பிணைக்கைதிகளை கொலை செய்வதை தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பு செய்வோம் என்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.