இம்ரான் கான் கைது – ஆதரவாளர்கள் போராட்டம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது கட்சியினர் போராட்டத்தில் குதித்ததால் நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ளது.
இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற இம்ரான் கானை பாகிஸ்தான் துணை ராணுவ படையினர் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். இந்த தகவல் கிடைத்ததும் கட்சி தொண்டர்கள் லாகூர், கராச்சி உள்ளிட்ட பல நகரங்களில் திரண்டு போராட்டம் நடத்தினர். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பல இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது.
போராட்டம் நடத்திய இம்ரான் கானின் கட்சி தொண்டர்களை போலீஸ் தடுத்ததால் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீச்சி அடித்தும் போலீசார் விரட்டி அடித்தனர்.
இதனிடையே ராவல் பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தை இம்ரான் கான் ஆதரவாளர்கள் தாக்கி தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடும் பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி ராணுவ தலைமையகத்தின் வாயிலை அடித்து உடைத்து அவர்கள் ஆவேசமடைந்தனர்.
இதனிடையே கைது நடவடிக்கைக்கு முன்னதாக வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்ட இம்ரான் கான் வாரண்ட் இருந்தால் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருந்ததாக தெரிவித்தார்.
My reply to ISPR & attempts by PDM & their handlers to arrest me for two reasons: 1. To prevent me from campaigning bec InshaAllah when elections are announced I will be doing jalsas. 2. To prevent me from mobilising the masses for street movement in support of Constitution if… pic.twitter.com/IQIQmFERah
— Imran Khan (@ImranKhanPTI) May 9, 2023
எதற்காக இவ்வளவு பிரச்சனை என்று கேள்வி எழுப்பிய அவர் தம்மை கொலை செய்ய நடந்த சதி விவரங்களை பட்டியலிட்டார். சிறைக்குச் சென்ற பிறகு பொதுமக்களிடம் பேசும் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்ததே வீடியோ வெளியிட காரணம் என்றும் இம்ரான் தெரிவித்தார்.
இதனிடையே இம்ரான் கைது நடவடிக்கைக்கான காரணத்தை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனானுல்லா விளக்கியுள்ளார். பிரதமர் பதவி வகித்த போது விதிகளை மீறி இம்ரான் கான் தொடங்கிய அறக்கட்டளைக்கு கிடைத்த நிதி முறைகேடாக செலவிடப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டின் கருவூலத்திற்கு செல்ல வேண்டிய நிதி தனிநபர்களுக்கு சென்றதாக ராணா சநானுல்லா தெரிவித்துள்ளார். இதனிடையே இங்கிலாந்து மன்னர் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நாடு திரும்பவில்லை.
லண்டனில் உள்ள முன்னாள் பிரதமரும் சகோதரருமான நவாஸ் ஷெரீப் கேட்டுக்கொண்டதால் ஒருநாள் லண்டனில் கூடுதலாக தங்கி புதன்கிழமை பாகிஸ்தான் திரும்ப உள்ளார்.