இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றுக் கொண்டார். அதோடு, போக்குவரத்து துறை அமைச்சராக பிமல் ரத்நாயக்க, மீன்வளத்துறை அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகரன் உள்ளிட்டோரும் அதிபர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி அடைந்து புதிய அதிபராக பதவியேற்றார்.
இந்த நிலையில், 225 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு நவ.14ம் தேதி தோ்தல் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் வேண்டிய நிலையில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி அசாத்திய வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து, செப்டம்பர் 24-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைய மேலும் 11 மாதங்கள் இருந்தபோதும், புதிய அதிபா் அநுர குமார திசாநாயக நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையொட்டி, இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூர்ய இன்று பதவியேற்றுக் கொண்டார். கடந்த மூன்று மாதங்களாக தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் பிரதமராக ஹரிணி அமரசூர்ய இருந்து வந்தார். ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் 655,289 விருப்பு வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றிருந்தார்.
தொடக்கம் முதலே அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்போது பெரும்பான்மைக்கு தேவையான 123 இடங்களை அக்கூட்டணி கட்சிகள் கைப்பற்றியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி 31 இடங்களை பிடித்து 2வது இடத்தில் உள்ளது. தேசிய மக்கள் சக்தி கூட்டணி 61.7 சதவிகித வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 17.72 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன.
இந்த பதவியேற்பு விழாவில் அதிபர் திசநாயகா முன்னிலையில் புதிய அமைச்சரவையும் பதவியேற்றது. 21 அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையில், போக்குவரத்து அமைச்சராக பிமல் ரத்நாயக்க, மீன்வளத்துறை அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகரன், வெளியுறவு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக விஜிதா ஹெராத் உள்ளிட்டோர் அதிபர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். அதோடு, உயர்கல்வி துறை அமைச்சராகவும் ஹரிணி பொறுப்பேற்றுள்ளார்.
இலங்கையின் புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் 21ம் தேதி தொடங்குகிறது.
உலக அளவில் மரியாதையை உயர்த்திய இந்தியா: அடேங்கப்பா இப்படி ஒரு முன்னேற்றமா..!