நியூசிலாந்து மாவோரி பழங்குடி மக்களுக்கு எதிரான சட்டத் திருத்த மசோதவை இளம் பெண் எம்.பி. ஆக்ரோஷத்துடன் கிழித்தெறிந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஓராண்டிற்கு முன்பு நியூசிலாந்து நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் தேசிய கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. பழங்குடி மக்களின் டி பாடி மாவோரி கட்சி சார்பில் 6 எம்.பி.கள் வெற்றிப் பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றனர். அவர்களில் ஒருவர் 21 வயதே ஆன ஹானா ரவ்ஹிடி என்ற பெண். நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்க நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் முதன்முறையாக மிக இளம் வயது பெண் இவர் மட்டுமே.
நியூசிலாந்தில் என்ன பிரச்சினை?
தென்மேற்கு பசிபிக் கடலில் உள்ள தீவே நியூசிலாந்து. 52 லட்சம் மக்கள் தொகையை கொண்ட நாடு. உலக மக்கள் தொகையில் 0.06% மட்டுமே. ஆஸ்திரேலியாவிலிருந்து 2000 கிலோமீட்டர் தென்கிழக்கில் அமைந்துள்ளது. நியூசிலாந்தின் வரலாறு 13 ம் நூற்றாண்டில் இருந்தே தொடங்குகிறது.
பாலினேசியா என்பது நியூசிலாந்தை ஒட்டியுள்ள பல தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியது. பாலினேசியா என்ற கிரேக்கச் சொல்லுக்கு “பல தீவுகள்” என்றே பொருள். இத்தீவுக் கூட்டங்களிலிருந்து பல காலங்களில் வந்து குடியேறிய கிழக்கு பாலினேசி ஆதிவாசி மக்களே மயோரி எனும் பண்பாட்டை நியூசிலாந்தில் வளர்த்திருந்தனர்.
1642 ல் டச்சு நாட்டைச் சேர்ந்த கடல் ஆய்வாளர் ஏபல் ஜான்ஜூன் மற்றும் அவரது குழுவினர் நியூசிலாந்து வந்து இறங்கினர். அவரை மயோரிகள் கொன்றனர். சிலாந்து என்பது டச்சு நாட்டிலுள்ள மாகாணம் ஒன்றின் பெயர். அங்கிருந்து வந்ததால் நியூசிலாந்து எனப் பெயர் வைத்தனர்.
1769 இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் குக் என்பவர் வந்து கடலோரப் பகுதிகளை ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து ஐரோப்பியர்களும், வட அமெரிக்கர்களும் தொடர்ந்து வந்திறங்கினர். இங்குள்ள ஆதிவாசிகளோடு வியாபாரம் செய்தனர். பலரது வருகையின் விளைவாக மயோரிகள் கிறிஸ்தவத்தை முழுமையாகத் தழுவினர்.

இங்கு குடியேறிய ஐரோப்பியர்களிடையே ஏற்பட்டக் குழப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, இங்கிலாந்து அரசாங்கம் வில்லியம் ஹாப்சன் என்பவரை நியூசிலாந்திற்கு அனுப்பி, மயோரி மக்களோடு இறையாண்மைக்கான ஒரு ஒப்பந்தத்தைச் செய்தனர்.1840 பிப்ரவரி 6 செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், நியூசிலாந்து ஒரு நாடு என்று அங்கீகரித்து, மயோரி மக்களுக்கான உரிமைகளையும் உறுதி செய்தது.
நியூ சவுத் வேல்ஸ் காலனியின் ஒரு பகுதியாக நியூசிலாந்தை முதலில் ஏற்றுக்கொண்ட இங்கிலாந்து அரசு, 1841 ல் நியூசிலாந்தை தனி காலனியாக்கி அறிவித்து ஆக்லாந்தை தலைநகர் ஆக்கியது. இதன் பிறகு ஐரோப்பியர்கள் ஏராளமாக வந்து குடியேறினர். 1852 ல் இங்கிலாந்து அரசு, நியூசிலாந்திற்கு தனி அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி, பிரதிநிதித்துவ ஆட்சியை ஏற்படுத்திக் கொடுத்தது.
1854 ல் நியூசிலாந்தின் முதல் நாடாளுமன்ற கூட்டம் கூடியது.1856 ல் உள்நாட்டுப் பிரச்சினைகளை கவனித்துக் கொள்ளும் பூரண தன்னாட்சி அரசு உருவானது. 1863 ல் வட மற்றும் தென் தீவுகளுக்கு மையமான துறைமுக நகரமான வெலிங்டன் தலைநகரம் ஆக்கப்பட்டது. உலகிலேயே முதன்முதலாக 1893 ல் பெண்களுக்கு வாக்குரிமை தரும் முதல் நாடாகவும் மாறியது.
1907 ல் இங்கிலாந்து அரசிற்கு உட்பட்ட தன்னாட்சி குடியுரிமை நாடாக மாறியது. 1917 ரஷ்யப் புரட்சியின் தாக்கம் இங்கும் லேசாக வெளிப்பட்டது. 1930 களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தொழிலாளிகள் தலைமையில் ஒரு அரசு உருவானது.
1945 இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் கிராமப்புரங்களில் இருந்த மயோரிகள் நகரத்திற்கு இடம் பெயர்ந்தனர். மயோரி பண்பாட்டை அங்கீகரிக்க வேண்டிப் போராட்டம் நடைபெற்றது. 1947 ல் காமன்வெல்த்தில் இணைந்த சுதந்திர நாடாக மாறியது.
1970 முதல் 1990 வரை சமூக பொருளாதார நடவடிக்கைகளில் பெரும் முன்னேற்றம் கண்டது. 1991 உலகமயக் கொள்கைகள் அமலாக்கத்திற்குப் பிறகு சமூக, பொருளாதார நடவடிக்கைகளில் மயோரிகள் புறக்கணிக்கப் படுவதாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. அமெரிக்க, ஐரோப்பீயர்கள் தங்கள் மண்ணை விட்டு வெளியேற வேண்டும் என்ற தீவிரக்குரலும் பல காலங்களில் வெளிப்பட்டது.
ஐரோப்பியர்களின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள நியூசிலாந்து பூர்வகுடிகளின் முழக்கம் எடுபடுமா? குரல்வளை நசுக்கப்படுமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் மாவோரி மக்களுக்கு எதிரான மசோதாவை ஆக்ரோஷத்துடன் கிழித்தெறிந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.