ஈரானில் ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவி ஒருவர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாட்டில் பெண்களுக்கு பல்வேறு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்வப்போது போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானின் இஸ்லாமிக் ஆசாத் பல்கலைக்கழக வளாகத்தில் இளம்பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென அவர் தமது ஆடைகளை களைந்து உள்ளாடையுடன் நின்றார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் அந்த பெண் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டிருந்தார். இதனால் பல்கலைக்கழக பாதுகாவலர்கள் அந்த பெண்ணை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த விவகாரம் குறித்து, இஸ்லாமிக் ஆசாத் பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண் கடுமையான மனஅழுத்தம் மற்றும் மனநல பாதிப்பில் இருப்பது தெரியவந்துள்ளதாகவும், அந்த பெண் மனநல மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் சரியாக அணியாததற்காக பாதுகாப்பு அதிகாரிகளால் அந்த இளம்பெண் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக ஈரானில் உள்ள ஆம்னஸ்டி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. ஆடை கட்டுப்பாடு விவகாரத்திற்கு எதிராகவே அந்த பெண் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஆம்னஸ்டி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் வழக்கறிஞர் அவருக்கு உதவியாக இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஆம்னெஸ்டி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.