அமெரிக்காவில் 6 மாத கைக்குழந்தையை 50 இடங்களில் எலிகள் கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணம் எவான்ஸ்வில் பகுதியைச் சேர்ந்தவர்கள் டேவிண்ட் – ஏஞ்சல் ஷோனபாம் தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் 3வது குழந்தை பிறந்துள்ளது. இந்த 6 மாத கைக்குழந்தையை தான் உடலில் 50 இடங்களில் எலிகள் கடித்துள்ளது. குழந்தையின் வலது கை விரல்களில் சைதையே இல்லாத அளவிற்கு எலிகள் கடித்துக் குதறியுள்ளது. உடல் முழுவதும் எலிக் கடிக் காயங்களுடன் குழந்தை குற்றுயிராக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் வீட்டில் நீண்ட நாட்களாகவே எலிப்பிரச்சனை இருப்பதும், வீட்டில் உள்ள மற்ற இரண்டு குழந்தைகளையும் எலிக்கடித்து, அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து குழந்தை வளர்ப்பில் பொறுப்பின்மை மற்றும் பராமரிக்கத் தவறிய குற்றத்திற்காக பெற்றோரையும், குழந்தைகளின் அத்தையையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்துடன் குழந்தைகளை மீட்டு அங்குள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.