இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அனுர குமார திசாநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 123 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது.
இலங்கையில் கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயகா வெற்றி பெற்று, புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து, அவர் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். பின்னர் நவம்பர் 14-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிபர் அனுரகுமார திசநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி, இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவு பெற்ற தேசிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. இந்த தேர்தல் ராஜபட்சே குடும்பத்தினர் பங்கேற்கவில்லை.
நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. நாடு முழுவதும் 13,314 வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் காலை முதலே ஆர்வமுடன் வாக்கினை செலுத்தினர். தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் நேற்று இரவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தேர்தல் முன்னணி நிலவரங்கள் தற்போது வெளியாகி வருகிறது. இதில், அதிபர் அனுரகுமார திசநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் தற்போது வரை 16 தேர்தல் மாவட்டங்களில் தபால் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அங்கெல்லாம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்கிற நிலையில, அதிபர் திசநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 123 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது. அவரது கட்சிக்கு முந்தைய நாடாளுமன்றத்தில் 3 எம்.பிக்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 123 இடங்களை வென்றுள்ளனர். முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 31 இடங்களில் வென்று 2வது இடத்தை பிடித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவு பெற்ற தேசிய ஜனநாயக முன்னணி 3வது இடத்தை பிடித்துள்ளது.