இஸ்ரேலிய பணயக்கைதியாக பிடித்து செல்லப்பட்டவர்களின் உயிரிழந்த 4 பேரின் உடல்களை சவப்பெட்டியில் வைத்து ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் நேற்று ஒப்படைத்தனர்.இஸ்ரேலிய பணயக்கைதிகள் 4 பேரின் உடல்களை இஸ்ரேல் ராணுவத்திடம் ஹமாஸ் போராளிகள் ஒப்படைத்தனர். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என 250க்கும் மேற்பட்ட இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனிடையே பதிலுக்கு ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு இதுவரை 46 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து 15 மாதங்களாக நடந்து வந்த போர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து பிணய கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் ஒவ்வொரு வாரமும் மூன்று, நான்கு பேராக விடுவித்து வந்த நிலையில் இதுவரை 24 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பதிலுக்கு நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வருகிறது. இந்நிலையில், பணயக்கைதியாக பிடித்து செல்லப்பட்டவர்களின் உயிரிழந்த 4 பேரின் உடல்களை சவப்பெட்டியில் வைத்து ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் நேற்று ஒப்படைத்தனர்.
இந்த 4 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்த இஸ்ரேல், ஒடெட் லிப்ஷி, குழந்தைகள் ஏரியல் பிபஸ், கிபிர் பிபஸ் ஆகியோரின் உடல்களை உறுதி செய்தன. ஆனால், 4வது உடல் ஷிரி பிபசின் உடல் இல்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், கொல்லப்பட்ட பணய கைதியின் உடலை ஒப்படைக்காமல் ஹமாஸ் ஆயுதக்குழு ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இந்த செயலுக்கு ஹமாஸ் ஆயுதக்குழு மிகப்பெரிய விலை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், 6 பிணைக் கைதிகளை நாளை உயிருடன் விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், 4 பிணைக் கைதிகளின் உடல்களை அடுத்த வாரம் ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமல்… ஹமாஸ் வசமிருந்த 3 இஸ்ரேலிய பணய கைதிகள் விடுவிப்பு!