நடிகர் அஜித், கார் ரேஸிங்கில் கலந்துகொண்ட பிறகு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து முடித்து இருக்கிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டில் அடுத்தடுத்து வெளியாக தயாராகி வருகின்றன. இதற்கிடையில் நடிகர் அஜித் மற்றும் அவரது அணியினர் துபாயில் நடைபெற்ற 24H ரேஸிங்கில் கலந்து கொண்டு 3ஆம் இடத்தை வென்றனர். அஜித் மற்றும் அவரது அணியினரின் இந்த வெற்றிக்கு ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் அஜித் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “துபாய் கார் பந்தய ரேஸின்போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி தருகிறது. எல்லாம் வல்ல இறைவன், என்னுடைய குடும்பத்தினர், திரைத்துறையினர் , ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் என்னுடைய அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை. இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும் தான் என்னுடைய ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக இருக்கிறது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார்ஸ்போட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக இருக்கிறது. இந்த பயணம் என்னை பற்றியது மட்டுமல்ல. உங்களைப் பற்றியதும் தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.