HomeRewind 20232023-ல் ஓடிடி தளத்தில் ஹிட் அடித்த திரைப்படங்களும், தொடர்களும்....

2023-ல் ஓடிடி தளத்தில் ஹிட் அடித்த திரைப்படங்களும், தொடர்களும்….

-

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என திரையரங்குகளில் கோலாகலமாக திரைப்படங்களை பார்த்து ரசித்த ரசிகர்களின் கவனத்தை, கொரோனா காலத்தில் தன் பக்கம் திருப்பியது ஓடிடி தளங்கள். திரையரங்குகள் அனைத்து அடைத்துவைக்கப்பட்ட போது, மக்களின் நேரத்தை கழிக்க உதவிய நிறுவனங்கள் ஓடிடி தளங்கள். நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், ஜீ5 என பல தரப்பட்ட தளங்களில் பல தரப்பட்ட திரைப்படங்களையும், இணைய தொடர்களையும் கண்டு ரசிக்க தொடங்கினர் மக்கள். ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப திரையுலகினரும் பல திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டனர். சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமன்றி முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பெரிய பட்ஜெட் திரைப்படங்களும் ஓடிடி தளங்களில் வந்திறங்கின. அந்த வகையில் 2023-ம் ஆண்டில் நேரடியாக ஓடிடி தளத்தில் வௌியாகி மக்கள் மனதை வென்ற திரைப்படங்களையும், இணைய தொடர்களையும் இந்த செய்தியில் விரிவாக காண்போம்….
அயலி …

இயக்குநர் முத்துமார் இயக்கத்தில் அபி நக்‌ஷத்ரா, அனுமோல், மதன், லிங்கா, சிங்கம்புலி, ஆகியோர் நடிப்பில் ஜனவரி 26-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான தொடர் அயலி. வீரப்பண்ணையிலிருந்து தமிழ்ச்செல்வியாக அறிமுகமான அபி நக்‌ஷத்ரா ஒடுக்குதல், ஆணாதிக்கத்திற்கு நடுவே கனவை துரத்தும் அயலியாக ரசிகர்கள் கண்களில் ஜொலித்தார். வழக்கமான இணைய தொடராக இல்லாமல், சற்றே விலகி நின்று அனைத்து பெண்களின் மனதிலும் இடம் பிடித்தது அயலி தொடர்.
தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்…..

நீலகிரியில் உருவாகி ஆஸ்கர் வரை பயணித்து வெற்றியையும் ருசித்த பெருமை தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் தொடருக்கு உண்டு. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட இந்த ஆவணப் படம் ஆஸ்கர் விருது வென்று தமிழக மக்கள் மட்டுமன்றி உலகளவில் அனைத்து தரப்பட்ட மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. பொம்மன், பெள்ளி தம்பதியோடு சேர்ந்து ரகுவை அதாவது யானையை பராமரித்ததை கண்கள் குளிர காட்சிப்படுத்தியிருப்பார்
இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ். இந்த தொடர் நெட்பிளிக்ஸ் தளத்தில் உள்ளது.
செங்களம்…..

வாணி போஜன், கலையரசன், மானசா ராதாகிருஷ்ணன், ஷாலி நிவேகாஸ் ஆகியோர் நடிப்பில் உருவான தொடர் செங்களம். உள்ளாட்சி தேர்தலில் அதிகாரத்தை பிடிக்க, ஒரு சிறு கிராமத்தில் நடக்கும் முழு நேர அரசியலே இந்த தொடர். காதல் கதைக்களத்தில் ஷாஃப்ட்டாக நடித்துக் கொண்டிருந்த வாணி போஜன் வட்டத்தை விட்டு வெளியேறி மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பார். பிரபாகரன் இயக்கிய இந்த தொடர் மார்ச் மாதம் 24-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
மாடர்ன் லவ் சென்னை….

நகப்புற காதலையும் அதைச்சுற்றி நடக்கும் சம்பவங்களையும் காட்சிப்படுத்திய காதல் தொடர் மாடர்ன் லவ். ஆந்தாலஜி தொடராக உருவான இது மே 18-ம் தேதி பிரைம் தளத்தில் வெளியானது. இமைகள், மார்கழி, லாலாகுண்டா பொம்மைகள், காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கற எமோஜி, நினைவோ ஒரு பறவை என ஆறு குறும்படங்களும் குறுங்கதைகளை காட்டுகிறது.
சொப்பன சுந்தரி ….

எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி ப்ரியா, தீபா ஷங்கர், தென்றல் நடிப்பில் உருவான திரைப்படம் சொப்பன சுந்தரி. ஏப்ரல் 14-ம் தேதி இத்திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது. ப்ளாக் காமெடி ட்ராமாவாக உருவான இப்படத்தில் கருணாகரன், ரெட்டின் கிங்ஸ்லீ, மைம் கோபி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கட்ஹல் …..

அசோக் மிஸ்ராவுடன் இணைந்து எழுதி யஷோவர்தன் மிஸ்ரா இயக்கிய திரைப்படம் கட்ஹல். உபி கிராமத்தில் வசிக்கும் எம்எல்ஏ வீட்டில் திருட்டுபோன பலாப்பழத்தை தேடி போலீசார் அலைவதும், அதேசமயம் சாதி அரசியல் பேசுவதும் படத்திற்கு வெற்றியாய் அமைந்தன. சான்யா மல்ஹோத்ரா நடித்திருந்த இந்த திரைப்படம் கடந்த மே 19-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.
ஸ்வீட் காரம் காஃபி…..

லட்சுமி, மதுபாலா நடித்துள்ள ஸ்வீட் காரம் காஃபி இணைய தொடர் ஜூலை 6-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது. வீடே உலகம் எனக்கிடந்த மூன்று தலைமுறைப் பெண்களும் உலகை தேடி செல்லும் சுவாரஸ்யமான கதையாக இது உருவானது. பாட்டி, அம்மா, மகள் என வெவ்வெறு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்களின் மனநிலையை வெளிச்சம் போட்டு காட்டி ரசிகர்களின் மதனை பிடித்தது ஸ்வீட் காரம் காஃபி தொடர்.
மை3 ….

சாந்தனு, ஹன்சிகா மற்றும் முகேன் ராவ் நடிப்பில் உருவான தொடர் மை3. சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய நகைச்சுவை படங்களை இயக்கி வெற்றிகண்ட எம்.ராஜேஸ் இயக்கிய மற்றொரு நகைச்சுவை தொடர் தான் இது. ரொமான்டிக் காமெடி ஜானரில், ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் காட்சிப்படுத்தியது இந்த மை3 தொடர். செப்டம்பர் 15-ம் தேதி இந்த தொடர் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியானது.
மத்தகம்….

மத்தகம் தொடர் கேங்ஸ்டர் ட்ராமா கதைக்களத்தில் நுழையும் வெப் தொடர்களுக்கு முது முகமும், புது அடையாளமும் கொடுத்துள்ளது. தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்கள் அதர்வா மற்றும் மணிகண்டன் இருவரும் இதில் நடித்திருந்தனர். ஒன்றுக்கு ஒன்று சளைக்காத கதையாய், போலீசாக வலம் வரும் அதர்வாவும் சரி, ரவுடியாக வலம் வரும் மணிகண்டனும் சரி இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பர். ஒரே இரவில் நடக்கும் ஆடு புலி ஆட்டமாக மத்தகம் தொடர் ஒரு சிறந்த படைப்பாக ஹாட்ஸ்டார் தளத்தில் பாராட்டப்பட்டது.
கேம் ஆஃப் த்ரோன்ஸ் தமிழ்…..

உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர் நவம்பரில் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. பரபரப்பும், எதிர்பாராத திருப்பங்களுடனும் எழுதப்பட்ட இந்த தொடர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தது. வெஸ்டரோஸ் என்றழைக்கப்படும் நிலத்தில் 7 ராஜ்யங்களுக்கு இடையே நடக்கும் போர்தான் இந்த தொடர்.
கூழாங்கல்….

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் கூலாங்கல். பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கிய இந்தப் படம் சர்வதேசப் பட விழாக்களில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது. குறிப்பாக ரோட்டர்டாம் விழாவில் விருது வென்ற முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையும் உள்ளது. அக்டோபர் 27-ம் தேதி இந்த தொடர் சோனி லைவ் தளத்தில் வெளியானது.
லேபிள்….

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடித்த லேபிள் வெப் தொடர் நவம்பர் 10-ம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது. ‘கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகிய படங்களை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இந்த தொடரை இயக்கியிருந்தார். வட சென்னை மக்கள் மீதான தவறான முத்திரையை மாற்றியமைக்கும் வகையில் இந்த தொடர் உருவாகியுள்ளது. வழக்கறிஞராக ஜெய் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தின.
தி வில்லேஜ்…

ஆர்யா நடிப்பில் உருவாகிய தி வில்லேஜ் தொடர் இந்த ஆண்டு வெளியான சிறந்த திகில் தொடர்களில் ஒன்று. திகிலும், திரில்லுமாக உருவாகியுள்ள இந்த தொடர் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. தூத்துக்குடி அருகே இருக்கும் ஒரு கற்பனை கிராமத்தில் நடக்கும் வினோத சம்பவங்களும், அதன் பின் இருக்கும் மர்மங்களும் என விறுவிறுப்பான கதைக்களத்துடன் உருவான இந்த தொடர் நவம்பர் 10-ம் தேதி பிரைம் தளத்தில் வெளியானது.

MUST READ