HomeRewind 2023பாலிவுட் பக்கத்தின் பிளாக் பஸ்டர் திரைப்படங்கள்

பாலிவுட் பக்கத்தின் பிளாக் பஸ்டர் திரைப்படங்கள்

-

- Advertisement -
நூறாண்டு கடந்து கொடி கட்டி பறக்கிறது இந்திய சினிமா. கோலிவுட், டோலிவுட், மோலிவுட், சாண்டல்வுட் என பல திரையுலகங்கள் இருந்தாலும், தாங்கள்தான் இந்திய சினிமாவின் அடையாளம் என்று தனி ராஜ்யம் நடத்திவந்தது, பாலிவுட் எனப்படும் ஹிந்தி சினி உலகம். கிட்டத்தட்ட இந்திய சினிமாவுடன் கைபிடித்து வளர்ந்த பாலிவுட் திரையுலகில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியை மட்டுமே பார்த்தன. தென்னிந்தியாவில் வெளியான திரைப்படங்கள் பாலிவுட்டில் வெற்றி பெற்றன. ஆனால், நடப்பு ஆண்டில் பாலிவுட் தேசத்தில் மீண்டும் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கதவைத் தட்டத் தொடங்கிவிட்டன. அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஆயிரம் கோடி, ஐநூறு கோடி என வசூலில் பட்டையை கிளப்பியதோடு விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களை பார்க்கலாம்….
பதான்…

நாட்டை நேசித்த ஒருவனுக்கும், நாட்டை நேசிப்பவனுக்கும் இடையேயான போட்டி தான் பதான் திரைப்படம். ஷாருக்கான், ஆப்ரஹாம், தீபிகா படுகோன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். சல்மான்கானும் கௌரவ வேடத்தில் நடித்திருப்பார். சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்த இத்திரைப்படம் இந்தாண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் வெளியானது. ஆக்ஷன், அதிரடிக்குப் பஞ்சமில்லாமல் உருவான பதான் திரைப்படம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது.
கிசி கா பாய் கிசி கி ஜான்

தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் இந்தி ரீமேக் தான் கிசி கா பாய் கிசி கி ஜான். இதில், சல்மான்கான், பூஜா ஹெக்டே, ஜெகபதி பாபு, வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ‘கேஜிஎஃப்’ புகழ் ரவி பஸ்ரூர் இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார். ரம்ஜானை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம் இத்திரைப்படம் வெளியானது. ஆட்டம், பாட்டம் என அமர்க்களமான திரைக்கதையுடன் வெளியான இத்திரைப்படம் 200 கோடி ரூபாய் வரை வசூலித்தது.
ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி…..

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கரண் ஜோகர் இயக்கிய திரைப்படம் ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி. இதில் ரன்வீர் சிங், ஆலியா பட், தர்மேந்திரா, ஜெயா பச்சன், ஷபானா ஆஸ்மி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். காதல், சென்டிமெண்ட், உறவுச் சிக்கல்கள், என முழுக்க முழுக்க தன் பழைய ஸ்டைலில் புது நட்சத்திரங்களுடன் கரண் இயக்கிய திரைப்படம் தான் இது. இத்திரைப்படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகி 355 கோடி வசூலித்தது. பெரும் நட்சத்திரங்கள் நடித்த இத்திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பும் பெற்றது.
OMG 2

பங்கஜ் திரிபாதியில் அழுத்தமான நடிப்பில் உருவாகிய திரைப்படம்தான் OMG 2. பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பங்கஜ் திரிபாதி. குணச்சித்திர வேடம், கௌரவ வேடம், நாயகன் வேடம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் தன்னைப் பொருத்திக்கொண்டு ரசிகர்களை கவர்ந்திழுக்கும் திறமை கொண்டவர் பங்கஜ். இயற்கை பேரிடரால் தனது கடை சேதமடைந்ததற்காக கடவுளின் மீது ஒருவர் வழக்கு தொடுப்பதே கதை. நகைச்சுவை வசனங்கள், இயல்பான காட்சி அமைப்புகள் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்து. இப்படத்தில் அக்‌ஷய் குமாரும் சாமியாராக நடித்திருப்பார். இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது.
தூ ஜூதி மெயின் மக்கார்

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவான திரைப்படம் தூ ஜூதி மெயின் மக்கார். ஷ்ரதா கபூர், அனுபவ் சிங், டிம்பிள் கபாடியா ஆகியோர் நடித்திருப்பர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான திரைப்படம் இது. காதலை பிரிக்கும் தொழிலை கௌரமாக செய்யும் தனது காதலனிடமே, தன் காதலை பிரிக்க உதவி கேட்பது என மாறுபட்ட பாதையில் திரைக்கதை பயணிக்கும். இத்திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி 200 கோடி ரூபாய் வசூல் செய்தது.
கதார் 2

சன்னி தியோல் நடிப்பில் உருவான திரைப்படம் கதார் 2. சுமார் 60 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 691 கோடி ரூபாய் வரை வசூலித்து மாஸ் காட்டியது. இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
டைகர் 3

சல்மான் கான் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியான ‘ஏக் தா டைகர்’ படத்தின் மூன்றாம் பாகம் டைகர் 3. தீபாவளி பண்டிகயை ஒட்டி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதில், கேத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஸ்மி, ரேவதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்பை யுனிவர்ஸில் ஒன்றாக வெளியானது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற கத்ரீனாவின் பாத்ரூம் சண்டைக்காட்சி படத்தில் வைரலாக பேசப்பட்ட ஒன்றாகும். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் 466 கோடி ரூபாய் வசூலித்தது.
ஜவான்

கோலிவுட்டின் வெற்றி இயக்குநர் அட்லீயின் பாலிவுட் பிரவேசம் தான் ஜவான் திரைப்படம். ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் என பெரும் ஆளுமைகளின் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் பட்டையை கிளப்பியது. செப்டம்பர் மாதம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த ஜவான் திரைப்படம் சுமார் 1,100 கோடி ரூபாய் வசூலித்து இதுவரை இல்லாத வகையில் சாதனை படைத்தது. இந்த ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான இரு திரைப்படங்களும் ஆயிரம் கோடி வசூலை தாண்டி பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக உயர்த்தியுள்ளது.
அனிமல்

டோலிவுட்டில் அர்ஜூன் ரெட்டி என்ற பிளாக் பஸ்டரை அள்ளிக்கொடுத்த கல்ட் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவின் அடுத்த படைப்பு தான் அனிமல். ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் சுமார் 800 கோடி ரூபாய் வசூலை தாண்டி ஆயிரம் கோடி ரூபாயை நெருக்கிக் கொண்டிருக்கிறது.

MUST READ