- Advertisement -

2023- ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகளை விரிவாகப் பார்ப்போம்!
தகுதி நீக்கத்தில் இருந்து மீண்ட ராகுல் காந்தி:
அவதூறு பேச்சு வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். எனினும், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் மாதம் இடைக்காலத் தடை விதித்ததால் ராகுல் காந்திக்கு எம்.பி. பதவி மீண்டது.

ஓரணியில் திரண்ட எதிர்க்கட்சிகள்:
மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையியல், தேசிய அரசியலில் புதிய திருப்பம் நேர்ந்தது. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட 25- க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் சேர்ந்து ‘இந்தியா’ என்ற பெயரில் புதிய கூட்டணியை அமைத்தனர். கடந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பிரிந்து களம் கண்ட நிலையில், இம்முறை அவை ஒன்றுச் சேர்ந்துள்ளது தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ளது.

கர்நாடகாவை கைப்பற்றிய காங்கிரஸ்:
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் திரிபுராவிலும், நாகாலாந்திலும் பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி அமைந்தது. மேகாலயாவில் மேகாலயா ஜனநாயகக் கூட்டணி வென்றது. மே மாதம் கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.விடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.

5 மாநில தேர்தலில் 3-ல் வெற்றி பெற்ற பா.ஜ.க:
நவம்பர், டிசம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், மிசோரமில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளை வீழ்த்தி புதிய கட்சியான சோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றது.

9 மாநிலங்களில் புதிய முதலமைச்சர்கள்:
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் 9 மாநிலங்களில் புதிய முதலமைச்சர்கள் பதவியேற்றனர். மத்திய பிரதேசத்தில் மோகன் யாதவும், ராஜஸ்தானில் பஜன்லால் சர்மாவும், சத்தீஸ்கரில் விஷ்ணுதேவ் சாயியும் முதலமைச்சர்களாக பா.ஜ.க. சார்பில் பதவியேற்றனர். கர்நாடகாவில் சித்தராமையா, தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி ஆகியோர் காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டனர்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் அதிகரிப்பு:
2023- ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிவில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 10 ஆக குறைந்துள்ளது. ஆந்திரா மற்றும் ஒடிஷாவில் மட்டும் இரு அணிகளிலும் இல்லாத கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

மக்கள் தொகையில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா:
சீனாவைப் பின்னுக்கு தள்ளி உலகிலேயே மக்கள் மிகுந்த நாடு என்ற பெயரை இந்தியா பெற்றுள்ளது. ஏப்ரல் நிலவரப்படி, இந்தியாவில் மக்கள் தொகை 142 கோடியே 80 லட்சமாக இருந்தது. 142 கோடியே 50 லட்சம் மக்கள் தொகையுடன் சீனா இரண்டாமிடம் பிடித்துள்ளது. 33 கோடியே 90 லட்சம் மக்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

திரும்பப் பெறப்பட்ட 2,000 ரூபாய் தாள்கள்:
பண மதிப்பு நீக்கத்தைத் தொடர்ந்து 2016- ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 2,000 ரூபாய் தாள்களின் பயன்பாடு, 2023- ல் முடிவுக்கு வந்தது. 2,000 ரூபாய் தாள்கள் தொடர்ந்து செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்தாலும், அவற்றை வங்கிகளிலேயே திரும்ப செலுத்திவிடுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, புழக்கத்தில் இருந்த 97.26% தாள்கள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பச் சென்றன.

மணிப்பூர் கலவரம்:
சுதந்திர இந்தியாவின் கருப்பு பக்கங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது மணிப்பூரில் நடந்த கலவரங்கள். பெரும்பான்மை மெய்தி சமூகத்தவருக்கும், சிறும்பான்மை குக்கி சமூகத்தவருக்கும் இடையே நடந்த தொடர் மோதலில் சுமார் 200 பேர் வரை கொல்லப்பட்டனர். கலவரத்தில் சிக்கி 1,000 பேர் வரை காயமடைந்தனர். இந்த கலவரத்தில் மிக மோசமான நிகழ்வாக இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது நாட்டையே அதிர வைத்தது.

புதிய நாடாளுமன்றம்:
இந்தியா தனது 75- வது சுதந்திர தினத்தை கொண்டாடிய நிலையில், நாட்டிற்கென புதிய ஆட்சி பீடம் உருவானது. நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாறு கொண்ட வட்ட வடிவமான நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு விடைக்கொடுக்கப்பட்டு, அதன் அருகிலேயே அதிநவீன வசதிகளுடன் கூடிய நாடாளுமன்றக் கட்டிடம் உருவாக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில், தமிழகத்தின் ஆதீனங்களிடம் இருந்து செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக் கொண்டார்.

நாட்டையே அதிர வைத்த நாடாளுமன்ற அத்துமீறல்:
புதிய நாடாளுமன்றத்துக்குள் பார்வையாளர்களாக நுழைந்த இரண்டு இளைஞர்கள், அத்துமீறி குப்பியை திறந்து மஞ்சள் புகையைப் பரவவிட்டனர். மேலும், நாடாளுமன்றத்திற்கு வெளியே சிலர் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

146 எம்.பி.க்கள் இடைநீக்கம்:
அத்துமீறல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் கோரியும், பிரதமரின் விளக்கம் கோரியும் அவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து இந்தியா கூட்டணி கட்சியினர், நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜி20 மாநாட்டைத் தலைமையேற்று நடத்திய இந்தியா:
உலக அரங்கில் வலிமை வாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 உச்சி மாநாட்டை முதன்முறையாக இந்தியா தலைமையேற்று நடத்தியது. இதில் உலகின் சவால்களுக்கு தீர்வுக் காணும் வகையில் விவாதங்கள் நிகழ்த்தப்பட்டன.

நிலவின் தென்துருவத்தில் இறங்கிய இந்தியா:
நிலவை எட்டிப்பிடிக்கும் அரிய வகை சாதனை, இந்தியாவிற்கு வசப்பட்ட ஆண்டாக 2023 அமைந்தது. கடந்த ஆகஸ்ட் 23- ஆம் தேதி நிலவின் தரையில் வெற்றிகரமாக இறங்கி, சந்திரயான்- 3 விண்கலம், இந்தியர்களை உற்சாகத்தில் திளைக்க வைத்தது. நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற அசைக்க முடியாத பெருமையையும் பெற்றது இந்தியா.

சூரியனை நோக்கிப் பயணிக்கும் இந்தியா:
ஆகஸ்ட்டில் நிலவை வெற்றிகரமாகத் தொட்ட இந்தியா, 10- வது நாளில் சூரியனை குறி வைத்து ஆதித்யா- எல்1 விண்கலத்தை அனுப்பியது.