2024 ஆம் ஆண்டின் மனம் கவர்ந்த நடிகைகள்
சாய் பல்லவி
கடந்த அக்டோபர் 31 ஆம் நாளில் தீபாவளி தினத்தன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்து ரெபேக்கா வர்கீஸ் எனும் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார். வழக்கம்போல் சாய் பல்லவி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றுள்ளார். அதாவது சிவகார்த்திகேயன் மட்டுமல்லாமல் சாய் பல்லவியும் தன்னுடைய கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி முகுந்த் வரதராஜனுக்கும் இந்து ரெபேக்காவிற்கும் இடையில் இருந்த தன்னலமற்ற காதலை கண்முன் காட்டி இருந்தார் சாய்பல்லவி. படம் வெளியாகி ஒரு மாதத்தை கடந்தும் இன்றுவரையிலும் அவருடைய நடிப்பு பேசப்பட்டு வருகிறது.
துஷாரா விஜயன்
நடிகை துஷாரா விஜயன் சார்பட்டா பரம்பரை, அநீதி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் ராயன் மற்றும் வேட்டையன் ஆகிய படங்களில் தான் இவருடைய கதாபாத்திரம் மிகவும் வலுவாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதேபோல் தனது கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை வென்றுள்ளார் துஷாரா விஜயன். எனவே குறுகிய காலங்களிலேயே திரைத்துறையில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் துஷாரா விஜயன்.
சுவாசிகா
கடந்த செப்டம்பர் மாதம் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகியோரின் நடிப்பில் லப்பர் பந்து எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் சுவாசிகா. இவர் ஏற்கனவே வைகை, கோரிப்பாளையம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் லப்பர் பந்து திரைப்படத்தில்தான் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டுள்ளது. அதாவது தற்போது கதாநாயகிக்கு அம்மாவாக நடிக்க எந்த நடிகையும் அவ்வளவு எளிதாக முன்வர மாட்டார்கள். ஆனால் சுவாசிகா தன்னுடைய கதாபாத்திரத்தை ஒரு சவாலாக எண்ணி அதை ஏற்று நடித்து பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றதோடு ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து இவர் சூர்யா 45 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகிலா விமல்
நடிகை நிகிலா விமல் கிடாரி, போர் தொழில் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் டீச்சராக நடித்த நிகிலா விமலை போல் ஒரு டீச்சர் நிச்சயம் எல்லோரின் வாழ்க்கையிலும் வந்து கடந்து சென்றிருப்பார்கள். அதன்படி தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறுவயதில் நம் ஸ்கூல் டீச்சரின் நினைவுகளை திரும்பக் கொண்டு வந்திருந்தார். இவருடைய நடிப்பும் ரசிகர்கள் மனதை வென்றுள்ளது.
அன்னா பென்
சூரி நடிப்பில் கொட்டுக்காளி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படம் திரையிடப்படுவதற்கு முன்பாக பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த படத்தில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அன்னா பென். ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பற்றி இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் அன்னா பென் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். இவருடைய கதாபாத்திரம் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு பெண்களின் வாழ்க்கையையும் தொடர்புப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.
பார்வதி
கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான தங்கலான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை பார்வதி நடித்திருந்தார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் திறமையான நடிகையாக வலம் வருபவர். அந்த வகையில் இவர் பூ, மரியான் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அதேபோல் தங்கலான் படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பெயர் பெற்றுள்ளார்.
மீனாட்சி சௌத்ரி
தெலுங்கு திரையுலகில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கி தமிழுக்கு வந்தவர்களில் நடிகை மீனாட்சி சௌத்ரியும் ஒருவர். அந்த வகையில் இவர் தற்போது தமிழிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். விஜயின் கோட் படத்தில் கதாநாயகியாக நடித்த இவர் கடந்த தீபாவளி தினத்தன்று வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்திலும் நடித்து பெயரையும் புகழையும் பெற்றுள்ளார்.
பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளித்திரையிலும் தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான டிமான்ட்டி காலனி 2, பிளாக் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. எனவே 2024 ஆம் ஆண்டில் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின்கள் லிஸ்டில் பிரியா பவானி சங்கரும் ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ கௌரி பிரியா
மணிகண்டன் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் லவ்வர் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் மணிகண்டனுக்கு நிகராக தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் ஸ்ரீ கௌரி பிரியா.