2024 ஆம் ஆண்டில் வசூலை வாரிக் குவித்த தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட்.
அரண்மனை 4
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களே அதிக வசூல் செய்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இருப்பினும் 2024ஆம் ஆண்டு தமிழில் 100 கோடிக்கும் அதிகமாக எந்த படமும் வசூல் செய்யவில்லை என்ற அதிருப்தி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. எனவே அந்த எண்ணத்தை உடைத்து எறிந்த முதல் தமிழ் படம் சுந்தர்.சி யின் அரண்மனை 4. இந்த படத்தில் சுந்தர். சி தவிர தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தில் கடந்த மே மாதம் வெளியான இந்த படம் கிட்டத்தட்ட ரூ.103 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
மகாராஜா
அடுத்தது கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா எனும் திரைப்படம் வெளியானது. மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படத்தை நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். ஹீரோவை விட திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுக்களை பெற்றிருந்தார் நித்திலன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இன்று வரையிலும் பேசப்பட்டு வருகிறது. அதன்படி இந்த படம் ரூ.110 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததை தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகி மகுடம் சூடியது இந்த மகாராஜா.
இந்தியன் 2
2024 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இந்தியன் 2 திரைப்படமும் ஒன்று. கமல்ஹாசன், சங்கர் கூட்டணியில் உருவான இந்த படம் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் ரூ.150 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ராயன்
கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் ராயன். இதில் தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பால முரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும் இந்த படத்தினை தனுஷ் தானே இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கலான்
2024 ஆம் ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான படங்களில் தங்கலான் திரைப்படமும் இடம்பெறும். கோலார் தங்க வயலில் தங்கம் எப்படி கண்டறியப்படுகிறது என்பதை மையமாக வைத்து வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று கிட்டத்தட்ட ரூ.101 கோடி வரை வசூல் செய்தது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்ட இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்க பா. ரஞ்சித் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
டிமான்ட்டி காலனி 2
கடந்த ஆகஸ்ட் 15 வெளியான படங்களில் டிமான்ட்டி காலனி 2 படமும் அடங்கும். இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் ஆகியோர் நடித்திருந்தனர். அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் ஜானரில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ. 85 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
கோட்
அடுத்தது தளபதி விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் கோட். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் நடிகர் விஜய், அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்து மிரட்டி இருந்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்த படம் சுமார் ரூ. 460 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் வசூலை கோட் படம் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்டையன்
கடந்த அக்டோபர் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் எனும் திரைப்படம் வெளியானது. ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் இந்த படத்தை இயக்கியிருந்தார். போலி என்கவுண்டர் குறித்தும் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் பேசிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதன்படி கிட்டத்தட்ட ரூ. 260 கோடி வரை வசூல் செய்து மெகா பிளாக்பஸ்டர் பட்டியலில் இணைந்துள்ளது.
அமரன்
கடந்த தீபாவளி தினத்தன்று திரைக்கு வந்த திரைப்படங்களில் முக்கியமான படமாக இன்று வரையிலும் பேசப்படும் படம் தான் அமரன். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்த இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். ராஜ்குமார் பெரியசாமி படத்தை இயக்கியிருந்தார். கமல்ஹாசன் இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்து ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் திரைப் பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டு மழையில் நனைந்து வருகின்றன. இந்த படம் தற்போது வரை கிட்டத்தட்ட ரூ. 302 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
கங்குவா
கடந்த நவம்பர் 14ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மிகப்பிரமாண்டமாக வெளியான படம் கங்குவா. சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறுகிய நாட்களில் அதிக வசூலை ஈட்டித் தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் தற்போது வரை ரூ. 130 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை வெளியான படங்களின் பட்டியலில் கோட் படம் முதல் இடத்தையும் அமரன் படம் இரண்டாம் இடத்தையும் தட்டி தூக்கியுள்ளது. அடுத்தது வேட்டையன் மூன்றாம் இடத்தை பிடித்த நிலையில் ராயன் நான்காம் இடத்திலும் இந்தியன் 2 ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றன. அடுத்ததாக கங்குவா, மகாராஜா, அரண்மனை 4, தங்கலான், டிமான்ட்டி காலனி 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.