Homeதிருக்குறள்15 - பிறனில் விழையாமை

15 – பிறனில் விழையாமை

-

- Advertisement -

15 - பிறனில் விழையாமை, கலைஞர் குறல் விளக்கம்  , திருக்குறள்,

141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
        தறம்பொருள் கண்டார்க ணில்.

கலைஞர் குறல் விளக்கம்  – பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.

142. அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
        நின்றாரிற் பேதையா ரில்.

கலைஞர் குறல் விளக்கம்  – பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.

143. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
        தீமை புரிந்தொழுகு வார்.

கலைஞர் குறல் விளக்கம்  – நம்பிப் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.

144. எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்
        தேரான் பிறனில் புகல்.

கலைஞர் குறல் விளக்கம்  – பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது. எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.

145. எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
        விளியாது நிற்கும் பழி.

கலைஞர் குறல் விளக்கம்  – எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.

146. பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
        இகவாவாம் இல்லிறப்பான் கண்.

கலைஞர் குறல் விளக்கம்  – பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.

147. அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலாள்
        பெண்மை நயவா தவன்.

கலைஞர் குறல் விளக்கம்  – பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.

148. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
        கறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

கலைஞர் குறல் விளக்கம்  – வேறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும் .

149. நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
        பிறற்குரியாள் தோள்தோயா தார்.

கலைஞர் குறல் விளக்கம்  – பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்.

150. அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
        பெண்மை நயவாமை நன்று.

கலைஞர் குறல் விளக்கம்  – பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.

MUST READ