191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
கலைஞர் குறல் விளக்கம் – பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்.
192. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கட் செய்தலிற் றீது.
கலைஞர் குறல் விளக்கம் – பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.
193. நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
கலைஞர் குறல் விளக்கம் – பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.
194. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
கலைஞர் குறல் விளக்கம் – பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.
195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.
கலைஞர் குறல் விளக்கம் – நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.
196. பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.
கலைஞர் குறல் விளக்கம் – பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்
197. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.
கலைஞர் குறல் விளக்கம் – பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.
198. அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்.
கலைஞர் குறல் விளக்கம் – அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர். பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.
199. பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
கலைஞர் குறல் விளக்கம் – மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.
200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
கலைஞர் குறல் விளக்கம் – பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.