Homeதிருக்குறள்23 – ஈகை -  கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

23 – ஈகை –  கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

23 – ஈகை -  கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

221. வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
        குறியெதிர்ப்பை நீர துடைத்து.

கலைஞர் குறல் விளக்கம்  – இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

222. நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
         இல்லெனினும் ஈதலே நன்று.

கலைஞர் குறல் விளக்கம்  – பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.

223. இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
        குலனுடையான் கண்ணே யுள.

கலைஞர் குறல் விளக்கம்  – தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.

224. இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
        இன்முகங் காணு மளவு.

கலைஞர் குறல் விளக்கம்  – ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்

225. ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
        மாற்றுவா ராற்றலிற் பின்.

கலைஞர் குறல் விளக்கம்  – பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப் பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

226. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
        பெற்றான் பொருள்வைப் புழி.

கலைஞர் குறல் விளக்கம்  – பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.

227. பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
        தீப்பிணி தீண்ட லரிது.

கலைஞர் குறல் விளக்கம்  – பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.

228. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
        வைத்திழக்கும் வன்க ணவர்.

கலைஞர் குறல் விளக்கம்  – ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈவு இரக்கமற்றோர். பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?

229. இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
        தாமே தமிய ருணல்.

கலைஞர் குறல் விளக்கம்  – பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.

230. சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
        ஈத லியையாக் கடை.

கலைஞர் குறல் விளக்கம்  – சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.

MUST READ