321. அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்
கலைஞர் குறல் விளக்கம் – எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.
322. பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை
கலைஞர் குறல் விளக்கம் – இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக்கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை.
323. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று
கலைஞர் குறல் விளக்கம் – அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன.
324. நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழும் நெறி
கலைஞர் குறல் விளக்கம் – எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.
325. நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை
கலைஞர் குறல் விளக்கம் – உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும் விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்.
326. கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணுங் கூற்று
கலைஞர் குறல் விளக்கம் – கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.
327. தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை
கலைஞர் குறல் விளக்கம் – தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக் கூடாது.
328. நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை
கலைஞர் குறல் விளக்கம் – பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள். அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.
329. கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து
கலைஞர் குறல் விளக்கம் – பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம்.இழிதகைப் பிறவிகளாகவே கருதும்.
330. உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
கலைஞர் குறல் விளக்கம் – வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர். ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.