Homeதிருக்குறள்45 - பெரியாரைத் துணைக்கோடல்- கலைஞர் மு.கருணாநிதி விளக்க உரை

45 – பெரியாரைத் துணைக்கோடல்- கலைஞர் மு.கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

45 - பெரியாரைத் துணைக்கோடல்- கலைஞர் மு.கருணாநிதி விளக்க உரை

441. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
        திறனறிந்து தேர்ந்து கொளல்

கலைஞர் குறல் விளக்கம்  – அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

442. உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
        பெற்றியார்ப் பேணிக் கொளல்

கலைஞர் குறல் விளக்கம்  – வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.

443. அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
        பேணித் தமராக் கொளல்

கலைஞர் குறல் விளக்கம்  – பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.

444. தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
        வன்மையு ளெல்லாந் தலை

கலைஞர் குறல் விளக்கம்  – அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.

445. சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
        சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

கலைஞர் குறல் விளக்கம்  – கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்.

446. தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
        செற்றார் செயக்கிடந்த தில்

கலைஞர் குறல் விளக்கம்  – அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.

447. இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
        கெடுக்குந் தகைமை யவர்

கலைஞர் குறல் விளக்கம்  – இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?

448. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
        கெடுப்பா ரிலானுங் கெடும்

கலைஞர் குறல் விளக்கம்  – குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.

449. முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
        சார்பிலார்க் கில்லை நிலை

கலைஞர் குறல் விளக்கம்  – கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடி துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.

450. பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
        நல்லார் தொடர்கை விடல்

கலைஞர் குறல் விளக்கம்  – நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.

MUST READ