Homeதிருக்குறள்51 - தெரிந்து தெளிதல் - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

51 – தெரிந்து தெளிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

51 - தெரிந்து தெளிதல் - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

501. அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
        திறந்தெரிந்து தேறப் படும்

கலைஞர் குறல் விளக்கம்  – அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.

502. குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
        நாணுடையான் கட்டே தெளிவு

கலைஞர் குறல் விளக்கம்  – குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும்.

503. அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்
        இன்மை அரிதே வெளிறு

கலைஞர் குறல் விளக்கம்  – அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழ்ப்-படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்து விட இயலாது.

504. குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்
        மிகைநாடி மிக்க கொளல்

கலைஞர் குறல் விளக்கம்  – ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.

505. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்
        கருமமே கட்டளைக் கல்

கலைஞர் குறல் விளக்கம்  – ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு. அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

506. அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
        பற்றிலர் நாணார் பழி

கலைஞர் குறல் விளக்கம்  – நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.

507. காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
       பேதைமை எல்லாந் தரும்

கலைஞர் குறல் விளக்கம்  – அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.

508. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
        தீரா இடும்பை தரும்

கலைஞர் குறல் விளக்கம்  – ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக்கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்.

509. தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்
        தேறுக தேறும் பொருள்

கலைஞர் குறல் விளக்கம்  – நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக் கூடாது.

510. தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்
        தீரா இடும்பை தரும்

கலைஞர் குறல் விளக்கம்  – ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும். ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்ட பின் அவரைச் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும்.

MUST READ