Homeதிருக்குறள்82 - தீ நட்பு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

82 – தீ நட்பு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

82 - தீ நட்பு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

811. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
        பெருகலிற் குன்றல் இனிது

கலைஞர் குறல் விளக்கம்நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை. மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது.

812. உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
        பெறினும் இழப்பினும் என்

கலைஞர் குறல் விளக்கம்தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்து விட்டுப் பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?

813. உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
       கொள்வாரும் கள்வரும் நேர்

கலைஞர் குறல் விளக்கம்பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும். விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும். ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்.

814. அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்
        தமரின் தனிமை தலை

கலைஞர் குறல் விளக்கம்போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்.

815. செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
        எய்தலின் எய்தாமை நன்று

கலைஞர் குறல் விளக்கம்கீழ் மக்களின் நட்பு,பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட ஏற்படாமல் இருப்பதே நலம்.

816. பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
        ஏதின்மை கோடி உறும்

கலைஞர் குறல் விளக்கம்அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்.

817. நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
        பத்தடுத்த கோடி உறும்

கலைஞர் குறல் விளக்கம்சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும், பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.

818. ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
        சொல்லாடார் சோர விடல்

கலைஞர் குறல் விளக்கம்நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விட வேண்டும்.

819. கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
       சொல்வேறு பட்டார் தொடர்பு

கலைஞர் குறல் விளக்கம்சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு. கனவிலே கூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும்.

820. எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
        மன்றிற் பழிப்பார் தொடர்பு

கலைஞர் குறல் விளக்கம்தனியாகச் சந்திக்கும் போது இனிமையாகப் பழகி விட்டுப் பொது மன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு, தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.

MUST READ