நாகூர் கடலில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம்- மீனவர்கள் போராட்டம்
நாகை அருகே சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாய் கடலில் உடைந்த விவகாரத்தில் 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாய் கடற்கரையோரம்செல்கிறது.
அந்த குழாயில் நேற்றைய முன்தினம் இரவு திடீரென உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் மீனவ கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து குழாய் உடைப்பினால் கச்சா எண்ணெய் பீய்ச்சிஅடித்த காரணத்தால் கண் எரிச்சல், சுவாச பிரச்னை போன்ற உடல் உபாதைகளை சந்தித்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவின்பேரில் துறை சார்ந்த அதிகாரிகள் சம்மந்தப்பட்ட சிபிசிஎல் நிறுவனத்தை கொண்டு இரவு பகலாக சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், ஆயில் கடலில் கலந்துள்ளதை டோர்னியர் விமானம் மற்றும் 2 கடற்படை கப்பல் மூலமும் கண்காணிப்பு பணி நேற்றைய தினம் நடந்தது. கடல் சீற்றம் காரணமாக சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டநிலையில் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டதாக சிபிசிஎல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் உடைப்பை செய்யாமல் வால்வை மட்டுமே அணைத்து இருப்பதாக குற்றம்சாட்டி கிராம மக்கள் இரண்டாவது நாளாக இன்று தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, உடைப்பை தற்காலிகமாக சரி செய்ததாக தெரிவித்துள்ள சிபிசிஎல் நிறுவனத்தினர் சீரமைப்பு பணியை இரண்டாவது நாளாக தொடங்கி உள்ளனர். நாகை அடுத்த நாகூர்பட்டினச்சேரி கிராம கடற்கரையில் சிபிசிஎல் நிறுவன பணியாட்கள் மணல் மூட்டைகள் கொண்டு உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.3 ஜேசிபி வாகனங்கள் மூலம் தடுப்புகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.