Homeசெய்திகள்மாவட்டம்தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றிய ஆசிரியர்கள் - உளுந்தூர்பேட்டை

தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றிய ஆசிரியர்கள் – உளுந்தூர்பேட்டை

-

உளுந்தூர்பேட்டை அருகே ஏமம் கிராம ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றி வரும் ஆசிரியர்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ஏமம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏமம் மற்றும் நத்தகாளி கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளி தனியார் பள்ளிகளுக்கு நிகராக ஆசிரியர்கள் மாற்றி வருவதால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த உடன் அனைத்து சுவர்களிலும் அழகிய வண்ணங்களில் படங்கள் வரைந்து மாணவர்களுக்கு கல்வி கற்க ஏற்ற வகையில் சூழலை ஆசிரியர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.

இதே போல் அனைத்து வகுப்பு அறைகளிலும் எளிய வழியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்கும் வகையில் படங்கள் மற்றும் எண்ணும் எழுத்தும் முறையில் பயிற்சி வகுப்புகள், ஆங்கில பாடங்களை எளிதில் கற்கும் பொனடிக் வழியிலான ஆங்கில பயிற்சிகள், மனித உறுப்புகள் மற்றும் செயல்படும் விதங்கள், இயற்கை வளத்தை பாதுகாத்தல், வன உயிரினங்கள் , பறவைகள் அதன் பெயர்கள் குறித்தும் படத்துடன் மாணவர்களுக்கு விளக்கி சொல்லும் வகையில் ஆசிரியர்கள் வகுப்பறையில் படங்களை வரைந்து உள்ளனர்.

எளிய முறையில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கணித பாட பயிற்சிகள், மாணவர்கள் அனைவரும் திறம்பட படிப்பதற்கு கூட்டுப் பயிற்சி வகுப்புகள், சக மாணவ, மாணவிகளை கொண்டு மற்ற மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து மாணவர்களுக்கு கல்வி பயிலும் அச்சத்தை போக்குதல், ஆங்கில பாடல்களை எளிதில் புரிந்து கொண்டு படித்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மாணவர்கள் எளிதில் படிக்கும் வகையில் இந்த பள்ளியை அரசு பள்ளி ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.

பள்ளியின் தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் கூட்டு முயற்சியினால் மாணவர்களின் கல்வி மேம்பட சிறப்பான பயிற்சியை அளித்து வருவதால் இந்தப் பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெற்றோர்கள் அதிக அளவில் மாணவர்களை சேர்த்து வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை அருகே ஏமம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக செயல்படுவதை மற்ற கிராமத்தில் உள்ள ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் ஆச்சரியத்துடன் சென்று பார்த்து வருகின்றனர்

MUST READ