அடிமை இந்தியாவில் பிறந்த சுதந்திர மனிதர்களும் உண்டு. சுதந்திர நாட்டில் பிறந்த அடிமை மனிதர்களும் இருக்கிறார்கள் என்பார் எழுத்தாளர் ஜெயகாந்தான்.
எம்.ஜி.ஆர் இறந்த போது கூட அதிமுக இவ்வளவு மோசமான நிலைக்கு சென்றதில்லை. ஆனால் ஜெயலலிதா மறைந்த பின்னர் அந்த கட்சியில் நடக்கின்ற கூத்துகள் ஹாலிவுட் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு உள்ளது. அதுவும் ஓபிஎஸ், ஈபிஎஸ் காலத்தில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு என்ற பெயரை உச்சரிக்க ஆளுநர் மறுத்தபோது கூட தாய் தமிழ்நாடு மீது சிறிதும் பற்று இல்லாமல் பாஜக வை பகைத்துக் கொள்ள கூடாது என்று மௌனம் காத்தார்கள். எதற்கெடுத்தாலும் பா.ஜ.க.விற்காக காத்திருக்கும் அவலம் அதிமுக விற்கு இப்போதுதான் வந்துள்ளது. அதனால் அந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஜி.ஆர். மறைந்தபோது ஜானகி, ஜெயலலிதா ஆகியோர் தலைமையில் அதிமுக பிளவு பட்டபோது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. 1989 ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களை கைப்பற்றியது. ரெட்டைப்புறா சின்னத்தில் போட்டியிட்ட ஜானகி அணியில் பி.ஹெச். பாண்டியன் மட்டும் வெற்றி பெற்றார். யதார்த்த நிலையை உணர்ந்த ஜானகி, தனது கணவர் தொடங்கிய கட்சி அழிந்து விடக் கூடாது என்று பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்தார். இன்றைய அதிமுக தலைமை அலுவலகமும் அவர் கொடுத்த சொத்துதான். ஒட்டு மொத்த கட்சியும் ஜெயலலிதா தலைமையின் கீழ் வந்தது. இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைத்தது.
ஜெயலலிதாவால் 2 முறையும், அவர் மறைவிற்கு பின்னர் ஒருமுறையும் முதலமைச்சராக்கப்பட்ட ஓபிஎஸ் ஒரு அணியாகவும், கூவத்தூரில் சசிகலா தயவில் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி மற்றொரு அணியாகவும், ஜெயலலிதாவின் தோழி சசிகலா மூன்றாவது அணியாகவும் பிரிந்து ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டு இருக்கின்றனர். பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் என் பக்கமே என்று எடப்பாடி ஏக வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நான் தான் என்று ஓபிஎஸ் மறுபுறம் மல்லுகட்டுகிறார். கட்சியினர் அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக் கொண்ட பொது செயலாளர் நான்தான் என்று சசிகலா வாதம் செய்து வருகின்றார். இவர்களுக்கிடையே உள்ள பிரச்சனையை விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பை தள்ளி வைத்து மேலும் அவர்களை குழப்பத்தில் வைத்திருக்கிறது.
இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தேதி அறிவிப்பால் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்றும், கட்சி யாரிடம் இருக்கிறது என்றும் முடிவு எடுக்க வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.
அதிமுக அணிகளை ஒருங்கிணைக்க பா.ஜ.க தலைவர்கள் முயற்சி செய்வதுபோல் வெளியில் தெரிகிறது. ஆனால் பிரிந்து கிடக்கும் அதிமுக தலைவர்கள் ஒன்றிணைவதை பாஜக விரும்பவில்லை.
திமுக – அதிமுக ஆகிய இரண்டு கட்சி தலைவர்களுக்குள் பல முரண்பாடுகள் இருந்தது. ஆனால் தமிழர்களின் உரிமைகளிலும், நலன்களில் வெளியார் தலையிடுவதை அனுமதிக்க மாட்டார்கள். ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை இட ஒதுக்கீடு 69 சதவீதத்தை போற்றி பாதுகாத்தார். நீட் தேர்வை தமிழகத்திற்குள் அனுமதிக்கவில்லை. அவர் மறைந்ததும் தங்களுடைய சுய லாபத்திற்காக அரசியல் ஆசானாக இருந்த ஜெயலலிதா மரணத்தில் புதைந்து கிடக்கும் மர்மத்தை கூட மறைத்தார்கள். அதன் பின்னர் படிப்படியாக ஜெயலலிதாவையும் மறந்து வருகிறார்கள். அதனை தொடர்ந்து அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தையும் பா.ஜ.கவிடம் அடகு வைத்து விட்டார்கள்.
ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் திமுகவும் அதிமுகவும் தமிழ்நாட்டிற்கு தேவை என்பதை அந்த தலைவர்கள் உணர வேண்டும்.
-என்.கே.மூர்த்தி