Homeசெய்திகள்அரசியல்அதிமுகவை கைப்பற்றினார் ஈபிஎஸ்

அதிமுகவை கைப்பற்றினார் ஈபிஎஸ்

-

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும் தீர்ப்பளித்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி அதிமுக வசம் செல்கிறது என்பதால் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

 

அதிமுக இரட்டை தலைமையில் பிரச்சனை ஏன் வந்தது, ஓபிஎஸ் ஈபிஎஸ் இடையிலான பிரச்சனை என்ன, வழக்கு விவரங்களை இனி பார்ப்போம்.

அதிமுகவில் தேர்தலுக்கு முன்னர் இருந்த இரட்டைத் தலைமை பிரச்சனை 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தபிறகு சூடு பிடிக்கத் தொடங்கியது. சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் ராஜ்ய சபா தேர்தல் வந்தபோது வேட்பாளர்களை அறிவிப்பதில் பிரச்சனை தொடங்கியது. அதாவது, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் மற்றும் ஜெயக்குமார் பெயர்களை முன்மொழிகிறார். இதை ஏற்க மறுக்கும் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களில் ஒருவருக்கு ஒரு இடம் வழங்க வேண்டும் என அழுத்தம் தருகிறார்.

இதனால் சி.வி. சண்முகத்திற்கு ஒரு இடமும் ஓபிஎஎஸ் ஆதரவாளரான ராமர் அவர்களுக்கு ஒரு இடமும் வழங்கப்படுகிறது. இதையடுத்து அதிமுகவை ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட வைக்க வேண்டும் என முடிவு செய்யும் எடப்பாடி பழனிசாமி அதற்கான பணிகளை தொடங்குகிறார். இதையடுத்து 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை கூட்டுகிறார். இதையடுத்து இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விடுகிறது.

அதே சமயம் பொதுக்குழுவுக்கு முன்னரே முடிவு செய்த 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதிக்கிறது. ஆனால் ஜுன் 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகிறது. அதிமுகவின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதிமுகவின் அடுத்த பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெறும் என தமிழ்மகன் உசேன் அறிவிக்கிறார். ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கப்படுகிறார். அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவிக்கிறார்.

இதையறிந்த ஓ.பன்னீர்செல்வம் இந்த பொதுக்குழுவின் தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடுகிறார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக அமைகிறது. பின்னர் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்ய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்கிறது. இதையடுத்து பொதுக்குழு தொடர்பான பிரச்சனையை உச்சநீதிமன்றத்திற்கு ஓபிஎஸ் கொண்டு செல்ல அங்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கி உள்ளது.

அதாவது ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதே சமயம் ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியது செல்லும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வு தெரிவித்துள்ளது. இதையடுத்து ஈபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பெரும்பாலான உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என விரும்பியதால் தேர்தல் மூலம் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதே அதிமுகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

MUST READ