பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது- திருமாவளவன்
அரசியலில் எத்தனை பின்னடைவுகளை சந்தித்தாலும் பாமக, பாஜக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பதவியை பார்த்து பல் இழிப்பவன் அல்ல
பாஜகவை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “பதவியை பார்த்து பல் இழிப்பவன் அல்ல திருமாவளவன், இந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அண்ணன் ஸ்டாலின், நான் தோற்றுவிடக்கூடாது என்பதற்காக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட சொன்னார். தோற்றாலும் பரவாயில்லை தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறேன் என சொன்னவன் நான். பதவிக்கும் ஆசைப்படுகிறவனாக இருந்தால், நீங்கள் சொல்றபடி கேட்கிறேன் அண்ணே என தலைகுனிந்து வந்திருப்பேன்.
பாஜகவை ஓட ஓட விரட்டியடிப்போம்
பாமக, பாஜக இருக்கும் இடத்தில் ஒருபோதும் விசிக இருக்காது. இதுமாதிரி சொல்வதற்கு இந்தியாவில் எந்த அரசியல் கட்சி தலைவருக்காவது தைரியம் இருக்கிறதா? கருணாநிதி எதிர்ப்பிற்கும் ஈழத்தமிழர் பிரச்னைக்கும் சம்பந்தமே கிடையாது. பாஜவுடனான கருத்தியல் யுத்தம் திமுகவிற்கும் பாஜகவிற்கும் அல்ல. அதிமுக அவர்களோடு இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கானதுமல்ல. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் விடுதலை சிறுத்தைகளுக்கும் பாஜகவுக்குமே கருத்தியல் ரீதியான யுத்தம் நடக்கிறது. ஓட ஓட விரட்டியட்டிப்போம். அரசியல் ரீதியாக என்ன பின்னடைவு ஏற்பட்டாலும் பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்க மாட்டோம். அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியை திமுக ஒருங்கிணைக்க வேண்டும் என்கிறோம். திமுக கூட்டணியை ஆதரிக்கிறோம்” எனக் கூறினார்.