கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதாரம் தற்போது சராசரியான நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் மாநிலத்தில் கடந்த பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
2030-ஆம் ஆண்டுக்குள் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கியும் இதை ஏதுவாக்கும் சுழலமைப்பை உருவாக்குதலும் என்ற தலைப்பில் அசோசெம்-தமிழ்நாடு மாநில வளர்ச்சி கவுன்சில் இணைந்த நடத்திய கருத்தரங்கை தொடங்கி வைத்து, தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இவ்வாறு பேசினார்.
கொள்கை சூழல், உட்கட்டமைப்பு, லாஜிஸ்டிக்ஸ், வலுவான கடன் அணுகு வசதி மற்றும் வளங்களுக்கு ஏதுவாக்கும் சூழல் அமைப்பை உருவாக்குவது, சாதகமான சந்தை மற்றும் தேவைநிலைகள் மற்றும் இணைப்பு வசதி உள்ளிட்ட தலைப்புகளிலான கருத்தரங்கில் அரசு துறைச் செயலாளர்கள் தொழில்துறையைச் சேர்ந்த ஆளுமைகள் பங்கேற்றனர்.
இதில், சிறப்புரையாற்றிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக மாற்றுவதில் உலக பொருளாதார நிலையின் பங்கும் இருக்கிறது என்றார். அதன் இலக்கை அடைய பல்வேறு காரணிகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும் உலகப் பொருளாதாரம் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறினார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதாரம் தற்போது சராசரியான நிலைக்கு திரும்பியுள்ளதாக கூறிய அவர், மாநிலத்தில் கடந்த பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.
2006- ஆம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு பிறகு 2011 முதல் 2020 ஆம் ஆண்டு தொடக்கம் வரை, மாநிலத்தின் GDP என்பது 23.7 சதவீதத்திலிருந்து 11.5 சதவீதமாக குறைந்தது என்றும் அதிமுக ஆட்சி என்பது மட்டுமல்லாமல், அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு காரணங்கள் இதற்கு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மாநில பட்ஜெட் போலவே இந்த பட்ஜெட்டிலும் பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருக்காது என அவர் கூறினார்.
வளர்ச்சியை அடைய புதிய வழிகளை இன்று தேட வேண்டும் என்றும் அதற்கு, இது போன்ற கருத்தரங்கங்கள் முக்கிய வழிவகுக்கும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார்.