ஈரோடு இடைத்தேர்தல் முடிவு அறிவிப்பதில் தாமதம்
ஈரோடு கிழக்கு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மைக்கில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தெரிவித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தலில் 2 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரும் இதுவரை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே வாக்கு எண்ணும் அறைக்குள் அனுமதிக்கக்கோரி அதிகாரிகளுடம் செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வேட்பாளர்கள் பெற்ற அதிகாரப்பூர்வ வாக்குகள் குறித்த பட்டியலை அதிகாரிகள் இதுவரை தரவில்லை என்றும், செய்தியாளர்களை வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பதாகவும் கூறி செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி, வெளிப்படை தன்மையுடனே வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக விளக்கம் அளித்தார். மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை எனக் கூறிய அவர், அடுத்தடுத்த சுற்றுகளின் வாக்கு நிலவரம் விரைவில் வெளியாகும் என்றார்.