தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 6 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கப்படும் நுகர்வோர், மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை, மின் வாரியம் நவம்பர் 15 ஆம் தேதி துவங்கியது. ஆதார் எண்ணை இணைக்க வசதியாக, மின் வாரியத்தின் 2,811 பிரிவு அலுவலகங்களிலும், நவம்பர் 28ம் தேதி துவக்கப்பட சிறப்பு முகாம், இம்மாதம் 31ம் தேதி வரை செயல்பட உள்ளது. ஆதார் இணைப்புக்கு, எண் மட்டும் பதிவு செய்வதுபோன்ற எளிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு வழங்கிய காலம் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், அந்த அவகாசம் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இன்றுடன் ஆதார் எண்- மின் இணைப்பு எண் இணைப்பதற்கான கெடு நிறைவடையவிருந்த நிலையில், மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15 வரை அவகாசம் வழங்கி அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். மின் இணைப்பு எண்ணை இணைக்க மேற்கொண்டு அவகாசம் வழங்கப்படாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.